வருக! நமஹ!



துள்ளும் அழகுடன் வெள்ளித் திருச்சபை
    தோன்றும் இறையவன் வருக! - எம்
துன்பக் கவலைகள் நிந்தைத் திவலைகள்
    தூரத்தில் சென்றனை விலக!
அள்ளி விடத்தினை உண்ட பெருமகன்
    அன்பர் மனத்தினில் வருக - அவன்
ஆட்டம் தனைக்கண்டு நாட்டம் மிகக்கொண்டு
    ஆழ்மனத் தேயிசை எழுக!
கொள்ளை யிருளினில் நல்ல நடமிடும்
    கோனவன் கண்முன்பு வருக - மதிக்
கொண்டை குலுங்கிடச் செண்டை முழங்கிடக்
    கூத்திடும் நாயகன் வருக!
பிள்ளை அழைப்பதைக் கண்டு சிவனுடன்
    பிஞ்சு நிலவொடு வருக! - அந்த
பிரம்மன் முதலிய தேவர் வணங்கிடும்
    பிரணவப் பொருளனே நமஹ! (1)


வாழ்வுக் கடலினில் வாட்டப் புயல்களை
    வந்து தணித்திட வேண்டும் - எனை
வண்ண மிலாதவோர் வானச் சிலையென
    வாரி அணைத்திட வேண்டும்!
ஏழ்மைத் துயரினை எட்டி மிதித்தருள்
     ஏகாந் தம்தர வேண்டும்! - யான்
எழுதும் கவிதையில் முழுதும் பொருளுடன்
    ஏறி அமர்ந்திட வேண்டும்
தாழ்வுற் றழுதிடும் என்றன் உயிரினில்
    தண்மை அருள்தர வேண்டும் - எங்கள்
தலைவன் பதநிழல் கவலைக் கொருதழல்
    தாபம் பொசுக்கிட வேண்டும்!
ஆழ்ந்த மனத்தினில் அன்பை விதைத்தெனை
    ஆளும் சடையனே வருக! - உமை
ஆதி பராபரை பாதி உடல்கொண்ட
    அரசு மகேசனே நமஹ! (2)

சூலத்துடன் வரும் காலக் கலைமகன்
    சூழ்வினை நீக்கிட வருவான் - உடல்
சுண்டி இழுத்திடும் வண்ண உடுக்கொலி
    சுறுசுறுக்க நடம் தருவான்
நீலக் கழுத்துடன் நீளும் அரவமும்
    நீண்ட சடையும் குலுங்க - அந்த
நித்திய தேவி மனோன்மணி ஆடிட
    நிலவுச் சதங்கைகள் பெறுவான்!
காலமெல்லாம் அவன் கோலத் திருநடம்
    காண விழிபல வேண்டும்! - அந்தக்
கலையின் எழில்பெறக் கவிதை உயிர்பெறக்
    காளன் அருள்தர வேண்டும்!
மூலம் அவனொரு மூர்க்கன் அவன்பெரும்
    மூர்த்தி யவன்புவி வருக! - எழில்
முத்துச் சிரிப்பொலி நித்தம் உதிர்த்திடும்
    முக்கண்ணத் தேவனே நமஹ! (3)

-விவேக்பாரதி
20.11.2018

Comments

Popular Posts