திரையுள்ள ஜன்னல்



என் ஜன்னல்களுக்கு
திரை மட்டும் இடுங்கள்
கதவுகள் இன்றி 
காதல்போல் நுழைந்து செல்லட்டும்
காற்று…

கம்பிகள் கூட வேண்டா
என் வீட்டுப் புத்தகத்தைத்
திருடர்கள்
திருடிக் கொண்டுபோய்தான்
படிக்கட்டுமே! 

யார் வந்து பரிசோதித்தாலும்
உள்ளத்தைப் புரட்டும் 
சில கவிதைகளைத் தவிற 
எனக்குச் சொத்து மதிப்பு 
ஏதுமில்லை! 

ஆனாலும், கதவுகளை விட 
பெரும்பாலும் என் வீட்டை 
ஜன்னல்களாலேயே 
அமைக்க விரும்புகிறேன்!

மனிதர்கள் விஷயத்தில் 
எதையும் எட்டிப் பார்த்துக் 
கடந்துவிடுவதே இப்போதெல்லாம்
நல்லதாகப் படுகிறது!

பறவைகளுக்கும் பூச்சிகளுக்கும்
வரவேற்பில்
ஜன்னலா? வாசலா என்பதில்
பேதமிருப்பதில்லையே!!

விவேக்பாரதி
17.01.2024
காலை 06.10

Comments

Popular Posts