தனையறியும் சித்து



தேகமென்ற ஒன்றைநான் தேவையில்லை என்றுதான்
தேகம் என்ப(து) இன்பமே தேடுமென்று நீக்கினேன்!
தேகமென்னும் கோயிலே செல்வமென்று கண்டபின்
வேகவேக வேகமாய் ஓடினேன் துலக்கவே! 

என்னை நானும் தேடியே ஈந்த காலம் தீர்ந்திட 
என்னை நான் விரும்பிட என்னிலே நிறைந்திட 
என்னில் நான் உழைத்துழைத்து என்னையே செதுக்கினேன் 
என்னை அன்றி என்முனே ஏதும் காண்ப(து) இல்லையே! 

யோகம் என்றும் போகமென்றும் சொல்லுகின்ற நூலெலாம் 
தாகதாகமாய்ப் படித்துக் கற்ற பாடம் இல்லையே 
தேகமென்னும் புத்தகம் தெரிந்து நான் திறக்கையில் 
சோகமென்றும் சோம்பலென்றும் சூழ்ந்தமாயம் தீர்ந்ததே! 

மோசமான உண்டியுண்டு மோசமாகி வீழ்ந்தநான் 
பாசமான நாவைக் கொஞ்சம் பண்பிலே அடிக்கினேன் 
லேசென்றான மேனி எங்கும் காற்றுதான் புகுந்துபோய் 
வீசவீச வானமேறி வீதிக்கோலம் காண்கிறேன்! 

கொஞ்சம் நான் அடங்கினால் கொடியெனப் பறக்கலாம்
கொஞ்சம் நான் அடங்கினால் கோபுரத்தைக் காணலாம்
கொஞ்சம் நான் அடங்கினால் குன்று போல நிமிரலாம்
கொஞ்சமாய் அறிந்ததும் குறையிலாது போனதே! 

என்னுளே இருந்த சக்தி எண்ணிடாமல் தேடினேன்
என்னுளே இருக்கவில்லை என்று துஞ்சி வாடினேன் 
என்னையே உடைத்துடைத்து உள் நுழைந்து பார்க்கையில்
என்னுளே இருந்த சக்தி எதிரிலே சிரித்ததே! 

மனமுடைந்து மனமுடைந்து கூடிடும் கனங்களை
தினமுடைந்து தினமுடைந்து ஏறிடும் ரணங்களை
எனையுடைத்து எனையுடைத்து புதுமைசெய்யும் வேளையில்
வினையுடைந்து கணமுடைந்து தடையுடைந்து போனதே! 

ஒன்றுநான் உரைக்கிறேன் ஒன்றையே நினைத்துநாம்
ஒன்றிலே உளம் கலந்து ஒன்றிப் போகும் போதினில்
ஒன்றிலே ஒளிர்ந்து மின்னி ஒன்றையே ஜெயிக்கலாம்!
ஒன்றென உயர்ந்துநின்று காணலாம் அனைத்துமே!! 

-விவேக்பாரதி
29.08.2023
காலை 09.56

Comments

Popular Posts