பெருமானும் மனிதனும்


குப்பை மேடேறிய கோணல் பெருமானுக்குக் 
குப்பையே அர்ச்சணைகள்
குப்பையை அள்ளிடும் தொழிலாளியின் வசை 
குணமான மந்திரங்கள் 
எப்போதும் சேர்கின்ற சேறோடு சகதியே
இயல்கின்ற திருமஞ்சனம் 
எவனோ உமிழ்ந்தபாண் முகத்தில் இருப்பதே 
இலகிடும் குங்குமங்கள் 
இப்போதும் நெல்விளை பூமியில் மழைபெய்(து)
இருக்கின்றதே வையமே! 
இதனால் உணர்கிறோம் இறைவாசம் என்பதோ
இயங்கிடும் தொழில்மட்டுமே! 


வீட்டின் சுவரேறிய அட்டைப் பெருமானையும் 
விரும்பியே வாங்கிவந்தார் 
வேளை தவறாமல் அவர் தேதி கிழிக்கையில் 
வேண்டிக் கொண்டே நகர்ந்தார் 
காட்டும் பலன்கள் அவன் கால்கள் கொடுத்தனெக் 
கண்களில் ஒற்றிக்கொண்டார், 
கடைசியில் அவ்வாண்டு தீர்கையில் அட்டையெனக் 
கண்டதும் குப்பைசேர்த்தார்
மாட்டியபோது அவன் மகிழவும் இல்லையாம் 
வீழ்ந்தபோ(து) அழவில்லையாம்!
மதியால் உணர்கிறோம் நிலையாமை என்பது 
மனிதர்க்கு மட்டுமிலையே!!

-விவேக்பாரதி
05.09.2021

Comments

Popular Posts