அவனுக்கோர் அழைப்பு


நல்ல வேளையில் நான் அழைக்கின்றேன்
நடந்தோ பறந்தோ வரச்சொல்லுங்கள்! 

நானறியாத இருட்டுப் பொழுதில் 
நடுநடுவே எனக்குள்ளே வந்து 
ஏனெனக் கேட்க வாயெழும் முன்பே 
இசைபல இசையாய் இன்பக் கனவில் 
ஆனவரைக்கும் ஆடி முடித்து 
அதனைக் கண்கள் ரசித்திடும் முன்னே
போன சுவடு புலனறியாமல் 
போய்மறைவானே அந்தப் புனிதனை (நல்ல)

உனக்கும் எனக்கும் நடுவே தோன்றி
ஊமை போல நின்று நில்லாமல் 
கனவு விரிப்பில் கவிதைத் தெறிப்பில் 
காலம் என்னும் புனைப்பெயரோடு
நனவில் கண்டு மறந்த நிஜங்களில்
நனைத்து நனைத்தெனைத் துவட்டி அருகே 
வனத்தைப் பரப்பி வழியுரைக்காமல் 
மறைவானே அம்மாயக் கள்வனை (நல்ல) 

கூப்பிட்டால் அவன் தோன்றுவதில்லை 
குறிப்பிட்டா மழை மண்ணை நனைக்கும்? 
காப்பிட்டால் பூங்காற்றா நிற்கும்? 
கட்டளை இட்டால் கடலா கேட்கும்? 
தீப்பற்றுங் கணம் சித்தம் பொறிகள்
தீக்கிரையாகிச் சுகந்தம் பரவ
மீட்புக் கரமும் நிறைவாய்க் கொடுத்து 
மின்னிடுவானே அந்த வினைஞன்! 

கூட்டம் தோறும் ஓரம் நிற்பவன் 
கோயில் தோறும் ஓடித் திரிபவன் 
பாட்டுக்கெல்லாம் நடுவில் நின்று 
பல்லவி சரணம் குழப்பி வைப்பவன் 
ஆட்டத்துக்கும் அவனே நாயகன் 
அழகுக்கெல்லாம் அவன்தான் தலைமகன்
ஏட்டுக்குள்ளே சிக்காக் கவிதை 
எனக்கு மட்டும் ரகசியத் தோழன்!

அவனை அவனை நானழைக்கிறேன் 
அருகில் இருந்தால் வரச்சொல்லுங்கள் 
அவனைக் காணல் மிகவும் சுலபம் 
அடையாளங்கள் சுருங்கச் சொல்கிறேன் 
எவனவன் உங்கள் அனுமதி இன்றி 
இதயம் தொட்டுத் திருப்புகிறானோ 
அவனே அவன்தான் பிடித்துக் கொள்வீர்
அதன்பின் வாழ்க்கை வண்ணச் சேர்க்கை!!

-விவேக்பாரதி
24 ஜனவரி 2023

Comments

Popular Posts