நெஞ்சுக்குச் சில மொழிகள்


எல்லார்க்கும் இனியவனாய் இருக்கமுடி யாது 
எல்லார்க்கும் பகையெனவும் எதிர்க்கமுடி யாது 
எல்லார்க்கும் தெரிவதற்காய் நீநடித்துக் கொண்டே 
எல்லார்க்கும் முன்னுன்னை இழக்காதே நெஞ்சே? 

உன்னுடைமை என்னுடமை ஊர்சொல்லும் பேச்சு
உன்னுடைமை என்பதெது யாதொன்றும் இல்லை 
உன்னுடைமை ஏதுமிலை என்றறியும் ஞானம் 
உன்னுடைமை ஆகையில்நீ ஊருடைமை நெஞ்சே! 

வாழ்வென்ப தேதறிவாய் வழுக்கிவிடும் பள்ளம் 
வாழ்வென்ப தேதறிவாய் வாய்ப்புதரும் வெள்ளம் 
வாழ்வென்ப தென்னென்றே வாழ்வதிலா நன்மை 
வாழ்வென்ப துனைநிறுத்தும் வழியறிவாய் நெஞ்சே! 

ஓடுவதே வாழ்க்கையென உழைத்திருப்பார் மக்கள் 
ஓடுவதே தேவையிலை என்றுரைப்பார் ஞானி 
ஓடுவதே செய்யாமல் ஓய்ந்திருப்பார் மூடர் 
ஓடுவதே இருக்கவென உற்றறிவாய் நெஞ்சே!

தேகத்தை ஓம்புவது தேவையிலை என்பார் 
தேகத்தை வளர்ப்பதுதான் தேவநிலை என்பார் 
தேகத்தை வளர்ப்பதுவும் தேய்ப்பதுவும் காலம் 
தேகத்தை நம்பியிரு, திரியாதே நெஞ்சே!

ஒருசொடுக்கில் உலகில்நீ உயரத்தில் நிற்பாய் 
ஒருசொடுக்கில் தெருக்கிடையில் ஊர்ப்புழுதி ஆவாய் 
ஒருசொடுக்கில் மாறிவரும் உலகத்தில் நீதான் 
ஒருசொடுக்கில் சொடுக்கும்கை ஆகிவிடு நெஞ்சே!

முன்பேசும் பலவாய்கள் முகதுதியே செய்யும் 
முன்பேசும் வாய்பின்னால் முணுமுணுப்பும் செய்யும் 
முன்பேசும் சிலவாய்கள் முதுகின்பின் ஊக்கும் 
முன்பேசும் திறமைகொள் முயற்சிக்காய் நெஞ்சே!

ஓரிடத்தில் நீயமர்தல் உண்மையிலே ஞானம் 
ஓரிடத்தில் நீயமர்ந்தால் உயராதம் மார்க்கம் 
ஓரிடத்தில் நீயமரும் நாள்சேரும் மட்டும் 
ஓரிடத்தில் அமராதே உழைத்திருப்பாய் நெஞ்சே!!

-விவேக்பாரதி 
11.07.2021

Comments

Popular Posts