மல்லிகைக் கேசம்


மல்லிகை சூடி நிற்கும் 
மன்மதன் வில்லைக் கண்டேன் 
புன்னகை ஏந்தி நிற்கும் 
பூமியின் அழகைக் கண்டேன் 
சொல்லெலாம் சொக்கிப் போகும் 
சுந்தரச் சிரிப்பைக் கண்டேன் 
சொல்லவே முடியா உன்றன் 
சௌக்கியம் கண்டு கொண்டேன்

வாளெனும் கண்கள், மேலே 
வில்லெனும் புருவம், கொல்லும் 
ஆளென அழகு, காக்கும் 
அமுதென முக ஜொலிப்பு! 
நாளெலாம் கண்டு கண்டு 
நயந்திடற் கேற்ற நெற்றி, 
தோளிலே சின்ன தாக 
தூறுமோர் கரிய கூந்தல்!

தங்கமா மார்பைத் தொட்டு 
தழுவிடும் என்றன் உள்ளம் 
அங்கமா இல்லை அந்த 
ஆண்டவன் செய்த சிற்பம் 
எங்குமே கண்டி டாத 
இலக்கியக் கவிதைச் சாறு 
மங்கிடா நிலவின் வாசம் 
மல்லிகை தரித்த கேசம்!!

விவேக்பாரதி
19.08.2020

Comments

Popular Posts