தாகம் தீர்க்கும் நமச்சிவாயம்


சூழ்கின்ற இருட்டுக்குள் ஒருவெளிச்சத்
துளிகசிந்தே ஒளிர்த்தல் ஒப்ப,
வீழ்கின்ற கனியொன்றை ஒருபறவை
காப்பாற்றி விழுங்க லொப்ப,
தாழ்கின்ற போதினிலே ஒருகைதான்
நமைப்பிடித்துத் தடுக்க லொப்ப
வாழ்கின்ற வகையறியா ஏழையனை
வாழ்விக்க வருவா யப்பா...

அப்பாநான் உன்னைத்தான் அழைக்கின்றேன்
ஏனின்னும் அகலாப் மௌனம்?
எப்பாடு நானின்னும் படவேண்டும்
நின்காட்சி எழிலைக் காண?
தப்பாமல் நாள்தோறும் உன்பேரும்
உன்மனையாள் சக்தி பேரும்
செப்பாமல் விட்டதில்லை கணக்கெல்லாம்
நீயறிவாய் திகம்ப ரேசா

சாட்டைநீ பம்பரம்நான் உனக்காநான்
சொல்வதுநீ சரித்து விட்ட
பாட்டைதான் என்பாதை பயணங்கள்
உனைத்தேடி பாடிப் பாடி
ஏட்டைத்தான் நான்நிறைத்தேன் உன்னுளத்தை
நான்நிறைத்தல் எப்போ தையா?
கூட்டைத்தான் சிறுபறவை பிரிந்துமிக
நாளாச்சே கூட்டிக் கொள்நீ

நீவேண்டும் நின்னருளின் இதம்வேண்டும்
அஃதிருந்தால் நீண்டு முன்னே
தீவேகம் கண்டாலும் நிலமதிர்வு
கொண்டாலும் திணற மட்டோம்
ஆவேசம் அறியாமை அழுகையெலாம்
உன்முன்னே அவிழ்த்து வைத்தேன்
நாவேண்டும் நீருன்றன் பெயரன்றோ
தாகந்தீர் நமச்சி வாயம்!!

-விவேக்பாரதி
18.07.2020

Comments

Popular Posts