பாரதி பாடிய பைந்தமிழ் - தில்லைத் தமிழ்ச்சங்கக் கவியரங்கம்.


பாரதி பாடிய பைந்தமிழ் என்றொரு 
   பரவசமூட்டும் தலைப்பு - கவி 
   பாடுதல் எங்கள் பிழைப்பு! - அந்தக்
கார ணத்தினால் வந்து நிற்கிறோம் 
   கவிதை எங்கள் உழைப்பு - உங்கள் 
   கைத்தட்டல் பரிசளிப்பு
  
காதுவழியக் கீதமெனும் காட்டுமலைத் தேனெடுத்து
மோதவந்து ஊட்டி விட்டவன் - பெரும்    
  மோனநிலை காட்டி விட்டவன்! - குளிர்

சீதமிகு காதலிலும் சீறும்ஞானப் பாடலிலும்
போதனைகள் தந்து சென்றவன் - பொழுது    
  போக்குக்காக வானம் வென்றவன்!

ஆதரவாய்ப் பேசியிருள் சாகரம் அழிந்துவிடப்
பாதைபோட்டுத் தான் நடந்தவன் - அந்தப்    
  பரமசக்தி நிழல் சுமந்தவன்! - ஒளி

ஆதி நெருப்பாகி வந்து ஜோதி நெருப்பாய் வளர்ந்து
வீதி நெருப்பான பாரதி! - அவன்    
  விந்தை தமிழுக்குச் சாரதி!

அத்தகைய பாரதியின் புகழ்பாடும் மன்றம்
  அவன்பிள்ளை மார்கூடித் தமிழ்பேசும் மன்றம்
முத்தமிழத் தென்றல்தொட முகையவிழும் மன்றம்
  முன்னவர்கள் நிறைந்துள்ள முத்தான மன்றம்
சத்துடைய பாட்டுமழைச் சரமிழையும் மன்றம்
  சாட்சியென நடராஜன் ஆட்சிசெயும் மன்றம்
புத்தம்புதுக் கவிஞனிவன் பாடவந்த மன்றம்
  பூத்தமுகம் சேர்த்தகரம் தட்டிடுங்கள் இன்னும்!

காதல் எனப்படுவ யாதெனின்...

“உள்ளடிக்கும் மின்னலது ஊசிமுனை அளவிருந்தும்
வெள்ளமென எதிர்பாய்ந்து வேகத்தைக் காட்டுவது!
சின்னஞ் சிறியமலர் ஜீவனுக்குள் தேவசுரம்
பென்னம் பெரியதுவாய்ப் பேரிடியாய்ப் பூமழையாய்
மண்ணுக்குள் பாயும் மாருதம்! மணியோசை!
கண்ணுக்குள் பூக்கும் ககனம்! ஆம்!காதல்

காதல், உலகத்தின் காருண்யம்! மனிதமனம்
ஏதோ இறைநிலையை எட்டிப் பார்க்குமிடம்!
அன்பென்னும் பெருந்தெய்வம் அர்ச்சிக்கும் மதம்காதல்
இன்ப நாதத்தை இசைக்கின்ற பொன்வீணை
கலவி தரும்வசந்தம் கவிதை தரும்கணக்கு
தலைவன் தலைவியெனத் தரணி புகழும்பதம்”

அத்தகைய காதலொரு நாள்கவிஞன் வீட்டின்
அழகான வாசலிலே நின்றகதை சொல்வேன் 


காதலெனும் பெண்ணொருத்தி கண்விசும்பி நின்றாள்
   கவிஞனுக்கோ அப்போது மிகச்சிறிய வயது! 
ஏதுவேண்டும்? என்னவென்று காதல்தனைக் கேட்டான்! 
   என்விருப்பம் போலெவரும் இங்கில்லை என்றாள்!
தூதுநடந் தேன்பழைய செய்திகளே சொல்லி 
   தோதான புதியபொருள் சொல்லியெனைக் கொஞ்சி
ஆதரவாய்ப் பேசவொரு ஆளிலையே என்றாள்
   அந்தோவென் றேநினைத்தான் அருகணைத்துக் கொண்டான்! 


தேனருவி போலகவி திசைநனைக்க லாச்சு
   தேடிவருன் தெய்வசுகம் மிகநெருங்க லாச்சு
வானமழை நெஞ்சினிலே வகைவகையாய்க் கண்டான்
   வார்த்தைகளில் சிலபெயர்த்தான் மீதியைச் சுகித்தான்
கானமெனக் காக்கைகுரல் காதில்விழக் கேட்டான் 
   காதலெனும் தெய்வமதன் மாயமெனத் தேர்ந்தான்!
மோனநிலைச் சிறுவனொரு முரசமென ஆனான் 
   முண்டாசு மீசைவைத்தான் காதலை அணைத்தான்!


சின்னஞ் சிறுவயதில் - அவன் 
   கண்ட கனவுகளைப் 
பின்னர் கவிதையிலே - சொன்ன 
   பெற்றிகள் அற்புதங்கள்! 


அன்னை பராசக்தி - உடன்
   அன்புத் திரு, வாணி 
என்கிற தேவியரை - மனம் 
   ஏற்றியே காதலித்தான்! 


வாணியைக் காதலித்தான் - முதலில் 
   வார்த்தை நலம் ஜெயித்தான்! 
மாணியல் லட்சுமியைக் - காதல் 
   மருவி எழில் வளர்த்தான்! 


வாணியும் லட்சுமியும் - உருவில் 
   மானிடர் ஆனதுபோல் 
காணி நிலத்தினிலே - தனியோர் 
   கன்னியைக் கண்டுவிட்டான்! 


ஒன்பது பிராயத்து மங்கை - அவள்
   உயர்ந்த அமுதத்துக் கங்கை - கண்டு 
மன்பதை கொண்டனன் சிறுவன் - அவனும் 
   மானிட வர்க்கத்தில் ஒருவன்! 


சாகுந்தலத்தினை ஒத்தாள் - மதன் 
   சாத்திடும் விற்புருவத்தாள் - நல்ல 
பாகுக் குரல்மொழிக் கிள்ளை - கண்டு 
   பாவலன் ஆகினன் பிள்ளை! 


ஆதிரையாம் திரு நாளில் - சிவன் 
   ஆலய மண்டபம் தன்னில் - அந்தக் 
காதலி பொட்டிட வந்து, - ஒரு 
   கனலைத் திலகமாய் வைத்தாள்! 


செய்கை அழிந்திடக் கண்டான் - புவி 
    சேர்ந்து சுழல்வதைக் கண்டான் - கவிப் 
பொய்கை நிறைவதைக் கண்டான் - அந்தப் 
   போதையில் மயங்கி நின்றான்! 


குப்புற வீழ்ந்தனன் சிறுவன் - அங்கு 
    குப்பென் றெழுந்தவன் கவிஞன் - அதற்கு 
அப்புறம் பாரதி வதுவை - பயல் 
    அசத்திவிட்டான் இந்தத் தடவை! 


பதினான்கில் பாரதிக்கும் பாதிசெல்லம் மாளுக்கும்! 
விதிப்படியே கல்யாணம் வீதிகளில் வைபோகம்! 
குதிபோட்டு விளையாடிக் களித்திருந்த சிறியவர்க்கு
நதிபோட்ட அணைபோல நடந்ததுவே கல்யாணம்! 


பந்தல்கள் தோரணம் மின்னின - மக்கள் 
படைகளே வந்திவை பண்ணின - கண்டு 
பாரதி எண்ணங்கள் துள்ளின - இவர் 
   பண்ணும்பல மன்னும்கலை 
   மண்ணின்கலை என்னும்நிலை 
பாலகன் நெஞ்சினில் ஊன்றவே - ஒரு 
பாடலும் வந்தெதிர் தோன்றவே! 


மாங்கல்ய சூத்திரம் என்பது - அந்த 
மங்கை கழுத்துக்குச் சென்றது - வந்த 
மக்களின் வாழ்த்தொலி நின்றது - முன்னர் 
   மணமேபுரி புதுஜோடிகள் 
   விளையாடிடும் எழிலூசலின் 
வண்ண நிகழ்ச்சியும் வந்தது - பிள்ளை 
வாயொரு பாடலைச் சொன்னது! 


கன்னத்தினில் குயில் சத்தமே - என்னும் 
கவிதையைப் பாடியோர் முத்தமே - தந்து 
கனிந்தது பாரதி சித்தமே - விழி
   கண்ணீர்தர உள்ளோடினள் 
   பெண்டிர்மடி யில்சேர்ந்தனள் 
காதல் தொடங்கிற்று சத்தமே - இனி
காலமெலாம் வரும் நித்தமே! 


என்றுள மக்கள் கூடி 
   இனியதாய் வாழ்த்துங் கூறி 
மன்றுள தம்ப திக்கு 
   மனநிறை ஆசீர் வாதம் 


தந்தனர்! அதற்குப் பின்னால் 
    தமிழ்க்கவி பார திக்குச் 
சிந்திலும் காதல் தோன்றும் 
   சிந்தையும் காதல் ஆச்சு! 


அந்நாளில் நம்மிடையோர் வழக்கம் உண்டு
  அன்புடைய பெண்களிடம் காதல் சொல்ல
முன்னாளில் நம்முன்னோர் அவர்க்கும் முன்னோர்
  முடைந்தபழ சொற்கள்சில அள்ளிச் சேர்த்து
அன்பேயென் ஆருயிரே மானே தேனே
  அழகான பொன்மானே கனியே காயே
என்றுபல சொல்லிவந்த வழக்கம்! அஃதை
  ஏசியவன் பாரதியாம் காதல் காரன்!

நாட்டினிலே பெண்களுடன் ஆண்கள் சொல்லும்
  நைந்தபழங் கதைகளையா நினக்குச் சொல்வேன்
பாட்டினிலே புதியவைகாண் என்று சொல்லிப்
  பாரதியார் செய்தகவி கண்ணன் பாட்டு!
வீட்டினிலே வளர்ப்புத்தாய் வாத்தி மற்றும்
  விளையாடும் சிறுவனொரு சிறுமி என்றும்
காட்சிபல சொல்லியவன் காதல் செய்த
  கவிதைநயம் நினைக்கையிலே இன்ப மன்றோ!

காதலிலே மானிடர்க்குக் கலவி உண்டாம்
  கலவியினால் மானிடர்க்குக் கவலை தீரும்
பாதையிது பாரதியார் போட்ட தன்றோ
  படங்களிலே நாள்தோறும் பார்க்கின் றோமே!
வேதங்கள் சொன்னதெனக் கண்ணன் பாட்டில்
  விரித்துரைக்கும் நுண்மைகள், காதல் பெண்ணை
நீதியுடை ராமனென்றும் கண்ணன் என்றும்
  நீண்டதவப் புத்தனென்றும் யாரே சொல்வார்?

நானுனக்கும் நீயெனக்கும் நல்லவிதம் சேர்ந்தகதை
வானகத்தும் வையகத்தும் வளர்ந்துநிற்க வேணுமெனத்
தானினைந்து பாரதிதான் தமிழ்பிசைந்து காதலெலும்
தேனளந்து தந்தகவி தாமெதற்கு நேராகும்?

வானமடி நீயெனக்கு வண்ணமயில் நானுனக்கு
வானமழை கண்டுமயில் ஆடுமெனச் சொல்லுகிறான்
பானமடி நீயெனக்குப் பாண்டமடி நானுனக்குப்
பலபிறவி கொண்டாலும் தாங்கிடுவேன் என்கின்றான்


ஞானவொளி வீசுதென நங்கைமுகம் காணுகிறான்
நல்லவுயி ரென்றவளை நாவாரப் பாடுகிறான்
ஊனமிலா நல்லழகாய் காதலியைக் காணுகிற
உள்ளத்துக் காதலனின் சொல்லெதற்கு நேராகும்?

போர்க்களத்தை பூமியிடை காட்டிடவே வந்தகதை
பொன்னான பாரதத்தை அந்நாளில் செய்கவிஞன்
பார்த்தனது வாய்வழியே அந்திதரும் அழகெல்லாம்
பகர்ந்ததுவும் காதலது பார்த்ததுவும் காதலன்றோ!


சீர்த்தகுரல் உடையகுயில் பாட்டுவழி தோப்பினிலே
சிந்தையபா முத்துகளின் ஜீவனெலாம் காதலன்றோ
ஆர்த்தபெரும் நகர்முரசம் ஆன்மீக விடுதலைகள்
அத்தனையும் காதலினால் அறிவித்தான் பாரதியே!

எப்படி எல்லாம் கண்ணம்மாவைச்
செப்புகி றானிவன் பாருங்கள்!

விழியோ இந்திர நீலப்பூ
  அழகோ மின்னலை நேர்த்திடும்
குழலோ அளவில் செரிகுழலாம்!
  நுதலோ பிள்ளைச் சூரியனாம்!

வட்டக் கருமை விழியழகு
  வானத்துள்ள கருமைகளாம்
பட்டுக் கருநீலப்புடவை
  பதித்த வைர விண்மீனாம்

சின்னஞ் சிறிய கிளியவளாம்
  செப்பும் மொழியில் தவறுவளாம்
தன்றன் கலியைத் தீர்த்திடவே
  தரையில் வந்த ஏற்றமுமாம்
  
எந்த நேரமும் நின்மயல் ஏறுதென்று
அந்தக் கந்தனும் அன்பினால் எண்ணிடும்
சிந்தைப் பாரதி பாடிடும் போதினில்
அந்த வள்ளிபால் நம்மனம் செல்லுமே!

ஆதலினால் அன்புடையீர் அன்புநகை யீருலகீர்
காதலினால் பாரதிசெய் கவியெல்லாம் ருசியுங்கள்

பாரதியின் கண்ணன் பகர்வதெலாம் கேளுங்கள்
யாரிதில் கண்ணன் கண்ணம்மா கவிராஜன்?

பாரதியின் கண்ணம்மாப் பாட்டெல்லாம் பாருங்கள்
யாரிதில் காதலன் காதலி ரசிகர்கள்?

பாரதியார் காதலெனச் சொல்வதெலாம் படியுங்கள்
யாரிதில் மானுடர் அமரர் தெய்வங்கள்?

பாயுமொளி என்றுகாதல் பாடுகிறான் பாரதி
   பாட்டுவழி இன்பஅலை வீசியதோர் வாரிதி
தோயுமனம் தோறுமவன் தொட்டணைக்கும் மாருதம்
  தூண்டுமின்ப வாடையிலே தான்மணக்கும் பாரதம்!


வேயுமொரு குழல்வழியே கண்ணனுடைக் காதலும்
  வெற்றியென நின்றிருக்கும் கண்ணம்மாக் காதலும்
சாயுமொரு ஜன்னல்வரும் சாரல்மழை ஆகிடும்
  சாரல்வரும் மேகவன் காதல்மனம் தூறிடும்!

தேசத்தின் மீதுமவன் காதல் வைத்தான்
  தெய்வத்தின் மீதுமவன் காதல் வைத்தான்
மாசக்தி மீதுமபன் காதல் வைத்தான்
  மக்கள்மேல் மண்ணின்மேல் காதல் வைத்தான்


பேசுமொழி மீதுமவன் காதல் வைத்தான்
  பேருணர்வாய் அனைத்திலுமே காதல் வைத்தான்
தேசம்மொழி தெய்வமெலாம் தலைப்பு! ஆனால்
  தேறியதோர் காதல்மட்டும் உணர்வு கண்டீர்!

காதலினால் மாக்கவிஞன் வென்றும் விட்டான்
  கைத்தட்டல் உங்கள்வழி தந்தும் விட்டான்
ஆதலினால் அனைவர்க்கும் நன்றி! மற்றும்
  ஆண்டவர்க்கும் அமைத்தோர்க்கும் வணக்கம்! நன்றி!!

-விவேக்பாரதி
22.09.2019

குரல்வழி பதிவைக் கேட்க

Comments

Popular Posts