எழுத எஞ்சும் வலி


உன்நே ரத்தில் எனக்கும் பங்கிட் டுறுதுணையாய்
என்சோ கத்தைத் தீர்பாய்க் காப்பாய்! எழில்கமழும் 
மின்னோக் கத்துக் கண்ணாய் மீட்டும் இசைக்குரலாய்! 
உன்னோக் கத்தில் ஊமை எனைநீ உயர்த்துகவே! 

மூடன் அற்பன் மூளை இல்லா முடவனெனைப் 
பாடம் சொல்லிப் பரிவோ டேகா பகலிறவாய் 
ஆடும் நெஞ்சுக் கடிமை என்னை அணைத்துமடி 
சூடும் எண்ணம் கொள்வாய் அழகே சுந்தரியே! 

வாவா வந்தென் வாட்டம் நீக்கி வாழ்வளிப்பாய் 
நீவா வந்தே நீட்டிக் கவிதை நிஜம்கொடுப்பாய் 
போய்வா என்றே புரட்டும் செய்கை புதுக்கியெனை 
பாவாய் காக்கப் பரிவோ டேவா பைரவியே! 

வாழ்வித் திடவோர் வைரத் தடமாய் வந்தவள்நீ 
தாழ்வித் திட்டென் தமிழ்சொத் தெழவே செய்தவள்நீ 
பாழ்வித் தெனநான் பட்டேன் புவியில் பரிவுடனே 
ஊழ்வித் தகற்றி உயிர்வித் திடுவாய் உத்தமியே! 

ஏனோ என்னை எனக்கே பிடிக்க வில்லையடி 
ஏனோ என்னை உனக்கு மட்டும் பிடிக்கிறதோ! 
வானோ வனமோ வளமை தரவே வந்துதித்தாய் 
ஞானா நிலையே நலமே தவமே நல்லவளே! 

பித்தன் என்னைப் பிழைக்க வைத்த பைங்கிளியே 
புத்தன் ஆக்கிப் புன்மை தீர்த்த புண்ணியமே! 
கத்தும் மனத்துக் காயன் நீங்கக் கடைவிழியால் 
சித்தம் குளிரப் பாராய் நிலவே சீதளமே! 

தலையில் புயலும் தானாய் இடியும் சேர்ந்திடிக்க 
நிலையில் லாமல் நானும் அழுதே நிஜம்மறக்க 
உலையில் நெஞ்சம் உடனே கருகி உயிர்துறக்க 
கலையே கலையின் மகளே வந்தே காத்திடவே! 

எழுதி எழுதித் தீர்த்தால் கூட எஞ்சும்வலி 
அழுது கொண்டே இருந்தால் கூட அருவிவிழி 
முழுதாய் என்னைத் தொலைத்தே இருளில் மூழ்குகிறேன் 
வலையே திணற வனைந்தேன் கவிதை வளைக்கரமே!!

#மௌனமடி நீயெனக்கு

-விவேக்பாரதி 
05.05.2019 

Comments

Popular Posts