சின்னஞ்சிறு கீற்றே!


சின்னஞ் சிறுகீற்றே - நீயோர்
     சேதி கேளாயோ?
உன்னைத் தோற்கடிப்பாள் - அவள்
     உருவம் காணாயோ?
மென்மை நடையழகி - எழில்
     மேவும் இடையழகி
தன்னந் தனிமையிலே - எனைத்
     தழுவிடுவாள் குலவி!

பச்சைப் பசுமுடல்தான் - கொண்ட
     பருவம் இளையதுதான்
இச்சைக் கினியவள்தான் - காண
     இன்பம் கொடுப்பவள்தான்!
உச்சந் தலைவகுட்டில் - இடை
     உன்னதக் கோலத்திலும்
மெச்சற் குரியவளாம் - என
     மேலவர் வாழ்த்திடுவார்!

காற்றில் அசைபவள் நீ - என்
     கவியின் அசைபவள்காண்! 
 சேற்றில் வளர்பவள் நீ -அவள்
     சேர்வதென் நெஞ்சகமாம்!
ஆற்றல் உடையவளாய்க் - கண்
     அழகில் கிழிப்பவளாய்த்
தோற்றம் கொடுத்திடுவாள் - முனம்
   தோற்பும் அழகல்லவோ??

-விவேக்பாரதி
07.07.2017

Popular Posts