காற்று தந்த கவி


காலையிளங் கதிரொளியென் கண்ணில் வீழக்
   கட்டிலதை விட்டுமெல்ல துயிலெ ழுந்தேன்
சோலையிளந் தென்றலொன்று காதில் வந்து
   சொன்னதுவே இரகசியமாய்க் கவிதை யொன்று
பாலைமணல் பைந்தளிரை ஈன்ற தற்போல்
   பாவெழுதும் எனக்கதுவோ புதுமை கேளீர்
வேலையெலாம் நான்மறந்து காற்று வந்து
   வேகுவழகாய் சொன்னகவி கேட்டி ருந்தேன் !

காற்றினிலே வந்தகவி கலியும் அல்ல
   காரிகையும் முன்சொன்ன வடிவும் அல்ல
ஆற்றைப்போல் புதுக்கவியின் வெள்ள மல்ல
   அரைசானே உயரமுள்ள ஹைக்கூ வல்ல
நேற்றையநாள் முன்னோர்கள் சொல்லி வைத்த
   நேர்த்திமிகு காப்பியத்து ளொன்று மல்ல
ஊற்றனைய உணர்வுகளைக் கிளப்பிப் பாயும்
   உயிரோட்டம் மிகுகவிதை இதுவே யென்பேன் !

என்னசுவை என்னசுரம் என்னே ராகம்
    என்றாலு மக்கவிதை இசைப்பா டல்ல
என்னபொருள் என்னநடை என்னே சந்தம்
    என்றாலு மக்கவிதை யாப்பு மல்ல
பொன்மேவும் காலையிலே கவிதை வந்து
   போகுமிடம் யாதென்று அறிய எண்ணி
ஜன்னலிடை நானெட்டிப் பார்த்தேன் ! அஃதோ
   சத்தமொடு கத்துகின்ற குழந்தைப் பேச்சாம் !

-விவேக்பாரதி
05.06.2015

Comments

Popular Posts