வெற்றிக்காதல்


அற்றைத் திங்கள் முழுமதி நாளில்
ஒற்றைத் பூ ஏந்திய செடிபோல் பெண்மகள்
நெற்றிப் பிறைக்குள் திலகம் அணிந்து  ! ஆசை
சுற்றும் விழியுடன் தெருவில் நின்றாள் !

கற்றுக் கனிந்த வானவர் தாமும் ! பொன்
விற்றுத் திரிந்த வாணிகர் தாமும் ! நாட்டுப்
பற்றும் மிகுந்த காளையர் தாமும் அவளை
உற்றுற்றுப் பார்த்தார் உள்ளம் பொருமினார்!

சற்று நேரமும் இடைவேளை இன்றி அவளைப்
பற்றிச் சென்றது இளம்புயல் காற்று

ஆற்றுக்குள் பாயும் மீன்கொத்திப் பறவைபோல்
காற்றைக் கிழித்திடும் பார்த்தனின் அம்புபோல்
சீற்றம் உடைய ஆழ்கடல் ஆழிபோல்
தோற்றம் பெற்றவன் அவனே அவளுக்கு
ஏற்றம் மிகுந்த காதலன் அவனே -தென்னங்
கீற்றுபோல் குறுகிய இடையும் மறையோர்
கூற்றுபோல் செப்பிடும் மொழியும் பசுமையின்
நாற்றுபோல் அழகிய நடையும் படைத்தவளே
தூற்றம் பெறாத அன்புசேர் காதலியே !

மாற்றம் பெரும் இவ்வுலகத் தரணியிலே
தோற்றிராத காதல் அவர்களது! என்றும்
மாற்றம் பெறாத மனமும் அவர்களது!

வற்றிராத காவிரிபோல் இருந்த அக்காதல்
வெற்றிடம் கண்டதால் வெற்றென்று போனதுவாம்
வெற்றிடம் கண்டு வற்றிப் போனதற்கு
ஒற்றன் என்கிற ஒருவெய்யில் காரணமாம்! 

கூற்றத்தை ஒத்த கொள்கையிலா அவ்வொற்றன்
மாற்றுச் சமூகம் வழிவேறு என்றெல்லாம்
ஆற்றைப் போல இருந்த அக்காதலினை
சேற்றுக் குழம்பலேன மன்னரிடம் செய்திசொன்னான்!

குற்றம் பலவற்றை அடுக்கடுக்காய் மேலடுக்கி
கொற்றவன் முன்னே கூறினான் அவனும்!
 
கொற்றவன் யோசித்து விடையும் சொன்னான்
முற்றத்தில் வளந்திடும் துளசி செடிபோல்
நற்றவம் மிகுந்தது அவர்களின் காதல்
மற்றவன் பழிகள் இயம்புதல் வேண்டாம் என்றான்

கற்பிதம் ஆகும் காதலை ஏற்போம்
கற்பக பதத்தான் பொற்கழல் ஆணை என்றான்
அற்புத வாக்கு உரைத்தீர் வேந்தே என
கொற்றவன் பதத்தை இருவரும் வணங்கி
வெற்றி யுடனே வீடு திரும்பினரே

உற்று நோக்குக உலகத்தீரே!
பற்றுக காதலை மனபலம் வளரும்
சுற்றும் பூமியும் நின்றே ஓடும்
வற்றாது மக்களே அன்பும் பண்பும்!

-விவேக்பாரதி
11.11.2012

Comments

Popular Posts