வகுப்பறை


(வெண்பாக்களின் சாயலில் படைத்த நுண்பாக்கள்)

வகுப்பறைக்குள் நுழையும் பொழுதே கவிதை 
தொகுப்பொன்றைப் படைத்திட நெஞ்சம் - மிகுந்த
ஆவலாய் இருக்கும்! எங்கள் வகுப்பறையே
பாவலர்கள் குடியிருக்கும் கோயில்

கருமை நிறத்தில் தென்படு கின்ற
பெருமை யுடைய தோழன் - அருமை
பயக்கும் கல்வி கொடுப்பான் உலகு
வியக்கும் செம் பலகை
 
எழுது கோலென்று பெயரைக் கொண்ட
தொழுதிட வேண்டிய பெண்மகள் - முழுமைக்
காகிதத்தையும் நிரப்பி வைப்பாள் ! அமுத
மாகிடும் எழுத்துத் தாரகை !
 
கொள்ளை இன்பம் குலவத் தந்திடும்
வெள்ளை மேனி யுடையாள் - அள்ளக்
குறையாத வெளிச்சம் தருவாள் ! மனத்தில்
நிறைந்த மின் விளக்கு !

தலைக்கு மேலே சுற்றிடுவான் உலகின்
தலையாய காற்றை அவன் - மூலை
முடுக்கெல்லாம் பாய்சிடுவான் எம்முடன் பயிலும்
இடுக்கண் களையும் நண்பன்

பறந்த திரியும் பறவைகளைக் கண்டு
சிறந்து விளங்கிய மனிதர்களையும்-பிறக்கும்
அறிவியலையும் தன்னகத்தே காட்டும் காகிதப்
பொறியியல் அதிசயம் தான்

விண்ணில் அலையும் கொளை மனக்
கண்ணில் காட்டும் அறிவுடையாள்-திண்ணம்
உடைய சொல்லுடையாள் பண்ணினும் இனிய
நடையு டையாள் மொழியில்
 
சிறந்து சீருயர்ந்த உலகி னையும்
பறந்து திரிகின்ற மனமதையும்-பிறந்த
காரணப் பொருளதையும் தெளிய வைத்திடும் 
தோரணம் போன்ற  நட்பு !

-விவேக்பாரதி 
09.10.2013

Comments

Popular Posts