அப்பர்சாமி பஞ்சகம்


-மயிலாப்பூரில் கோயில் கொண்டுள்ள அப்பர்சாமி கோயிலுக்கு முதன்முறை சென்றபோது இசைக்கவி ரமணன் ஐயாவின் அன்புக் கட்டளையால் எழுதப்பட்ட பதிகம்-

மௌனத்தின் வெளியெண்ணி தியானிக்கத் தெரிகின்ற 
முழுமூலம் நீ என்கிறார் - வாழ்வில் 
மோகத்தை எண்ணத்தின் போகத்தை விட்டுவிட 
முக்திதரு வாயென்கிறார் 
கானத்தில் பிசகாது கவியாற்றல் குறையாது 
கருத்தூற்றும் அடியவர்க்கு - நீ 
கதிதந்து விதிதீர்த்துக் கருணால யங்காட்டிக் 
கவினாக்குவாய் என்கிறார் 
ஞானத்தை வரமாகக் கொண்டுள்ள பண்டிதரின் 
ஞாலத்தை விரிவாக்கியே - அவர் 
நாளைக்கு வருவதையும் வேடிக்கை போற்சொல்லும்
நயம்கூட்டுவாய் என்கிறார் 
நானெத்தைச் செய்துன்றன் நனிபத்ம பாதத்தின் 
நலம்காணக் கூடுமையா? - சிறு 
நாணலை இமைதூக்கி நீகாணப் பாடுவேன் 
நல்லப்ப சாமி ஐயா! 

யாதென்றன் புறவாழ்வு யாதென்றன் அகவாழ்வு 
யாதொன்றும் அறிகிலேன் நான் - தனி 
யாழ்போல இசைமீட்ட அலைபோலத் தாளமிட 
யாக்கையைப் பெற்றிலேன் நான் 
தீதென்ன நன்றென்ன ஆராயத் தெரியாமல்
தினமாடும் ஓருயிர் நான் - எது 
திடமென்று தெரியாமல் திறனென்ன அறியாமல் 
திக்குமுக்காடுவோன் நான் 
கீதங்கள் பலபாடிக் கவிசொல்லி அடிநாடக் 
கிட்டநின்(று) அடிமை செய்ய - என் 
கீழுடல் அறுத்தேனுங் கண்ணைக் கொடுத்தேனும்
கிரிவல பல நடந்தும்
சூதைத் துறந்தேனும் மாதை மறந்தேனும் 
சுத்தமுற வழியில்லையே - என் 
சுமைநீங்க நின்னருட் சுடர்காணப் பாடுவேன் 
தீண்டப்ப சாமி ஐயா! 

பல்லூர்கள் சென்றுன்றன் பலன்சொல்லும் மந்திரம் 
பாடாத மூடனையா - என் 
பணியென்ன கடனென்ன ஏதுமறி யாமலே 
பயணிக்கும் தோனி ஐயா!
நல்லோர்கள் வழிநின்று நாள்மாற மனம்மாறி
நாசத்தில் இடறி வீழ்ந்து - ஒரு 
நலனற்ற ஏழையாய் நடுத்தெருவில் ஊமையாய் 
நாள்போக்கும் நெஞ்சனையா 
வில்போல விசைகொண்ட இளமையின் ஆற்றலை 
வீணாக்கும் கயவன் ஐயா - இரு 
விழிமூடி தியானித்து வழிதேட யோசிக்கும் 
வித்தை அறியாதவன் நான் 
புல்போல சிலநேரம் புள்போட சிலநேரம் 
புதிர்போடும் மனம் ஏனையா? - ஒரு 
புருவத்தின் அசைவேனும் காட்டிடப் பாடுவேன் 
புகழப்ப சாமி ஐயா! 

எதைவேண்ட எவண்வேண்ட ஏன்வேண்ட என்றெலாம் 
என்றும் நினைத்ததில்லை - உன் 
எழிலாடும் கோலத்தைக் கண்டதும் என்கைகள் 
எழுதா(து) இருந்ததில்லை! 
புதுமைக்கும் பழமைக்கும் நிலைமாறும் எண்ணத்தில் 
புரியுமோர் செய்தியில்லை - வெற்றுப் 
புகழ்தேடும் ஆசையை இகழ்நேர அழுகையைப் 
புதைக்கவும் தெரியவில்லை
மதுதொட்டுப் புகைதொட்டு பொறியின்ப வெறிதொட்டு 
மறுநாளில் உனைப் பாடியே - உன் 
மனம்வென்ற மக்களின் வரலா(று) அறிந்துமே 
மரியாதை தெரியவில்லை! 
கதவுற்ற வீட்டுக்குள் நாளெலாம் கதறியே 
காலங் கழித்த பிள்ளை - ஒரு 
கணக்குமிடத் தெரியாமல் காலத்தின் ஓட்டத்தில் 
காலிடறி ஓடும் பிள்ளை 
சதியென்ன செய்தாலும் சினமென்னைத் தின்றாலும் 
சிரிக்கின்ற ஜீவன் ஐயா! - உள்ளில்
சக்தியைக் கொண்டவா நான்பாடி கேட்பதனைத் 
தா! அப்பசாமி ஐயா! 

உள்ளத்தில் விடுதலை உணர்வுக்குள் சமநிலை
உருவாகக் காண வேண்டும் - என்
ஊமைவாய் உமையருளும் பாடலின் ஊற்றினால் 
உயிரோடு பாட வேண்டும்
தெள்ளத் தெளிந்ததாய்த் தெளிவூட்டும் மின்னல்கள் 
தேடிவந்(து) அடிக்க வேண்டும் - என்
தேவைகள் யாவுமொரு பூவாகிப் போயுன்றன் 
திருப்பாதம் சேர வேண்டும்! 
கள்ளமில்லாக் குணம் கவலையில்லா மனம் 
காயத்தில் பொறிகள் ஆட்சி - வரும் 
கருத்துற்ற வேகத்தில் கையெழுதும் பேராற்றல் 
கடவுள் மறவாத நெஞ்சம் 
விள்ளற்கு விட்டபல விழைவெலாம் விளைவெலாம் 
விரிவாய்க் கொடுத்தி(டு) ஐயா - கரு 
விடமுண்ட கண்டனே விடையேறும் மன்னனே 
வீரப்ப சாமி ஐயா!!

-விவேக்பாரதி
16.06.2017

Comments

Popular Posts